ராமேசுவரத்தில் புதிதாக திறந்த இந்து முன்னணி நிர்வாகி நினைவு மண்டபத்துக்கு ‘சீல்’ வைப்பு 26 பேர் கைது

ராமேசுவரத்தில் புதிதாக திறந்த இந்து முன்னணி நிர்வாகி நினைவு மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர். இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-21 23:00 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை சேர்ந்தவர், மா.முனியசாமி. இந்து முன்னணி மாநில செயலாளராக இருந்த அவர், கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அவருக்கு இந்து முன்னணி சார்பில் ஸ்தூபி அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அவரது நினைவு நாளன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு நேற்று காலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில நிர்வாகி பழனி வேல்சாமி, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் ஆடலரசன், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் சரவணன், சேவாபாரதி மாநில இணை அமைப்பாளர் முனியசாமி, ராமேசுவரம் நிர்வாகி நம்புராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு, அவரது மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், திலகராணி, பிரபு, தாசில்தார் சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ரோட்டரிகோ உள்பட வருவாய் துறையினர், நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு வந்தனர்.

அங்கு அஞ்சலி செலுத்தியவர்களை கலைந்து செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 26 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மண்டபத்தை வருவாய்த்துறையினர் பூட்டி ‘சீல்‘ வைத்தனர்.

இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கூறும்போது, இந்த நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது. இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றுத்தான் நினைவிடம் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதிகோரி மனு கொடுக்கப்பட்டது. அதற்கு போலீசார் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேலும் இதன் திறப்பு விழா குறித்து நகரின் பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் நினைவஞ்சலி செலுத்திய எங்களிடம் போலீசார் அநாகரிகமாக நடந்து கொண்டது வேதனைக்குரியது. நாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை. மலர் அஞ்சலி செலுத்துவதற்கு கூட எங்களை அனுமதிக்காமல் போலீசார் கைது செய்துள்ளனர். எங்கள் மீது பொய் வழக்கு போட முயற்சிக்கின்றனர்“ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்