மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2019-01-22 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் தலைமையில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆனந்தன், அரவிந்த்பாபு, சிவா மற்றும் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்திலேயே கலப்பட மணல் கடத்தல் மற்றும் மணல் கொள்ளைக்காக ரூ.5 கோடிக்கு மேல் அபராதத்தொகை வசூல் செய்த மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு துணையாக கனிமவள அதிகாரி மற்றும் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். இதுபற்றி நாங்கள் பலமுறை மணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனு மீது விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்