தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல் அரசு ஊழியர் பலி

நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு ஊழியர் பரிதாபமாக இறந்தார். அவருடைய உறவினர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-01-22 22:19 GMT
நாங்குநேரி, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் ரஞ்சித்குமார் (வயது 27). இவர் ராதாபுரத்தில் உள்ள அரசு சார்நிலை கருவூலத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று இவர் தனது சித்தப்பா சேகர் (53) என்பவருடன் நெல்லையில் இருந்து ராதாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ரஞ்சித்குமார் ஓட்டினார்.

நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் வந்த போது நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சேகர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சேகரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான ரஞ்சித்குமார் உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்