திருவண்ணாமலையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது பணம்கட்டி ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம்

திருவண்ணாமலையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவான தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பணம்கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-01-23 22:15 GMT
வேலூர், 

சென்னை பெரும்பாக்கம் ரத்தினம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது55). இவருடைய மனைவி இந்துமதி (47), இவர்களுடைய மகன் விக்னேஷ் (27). இவர்கள் 3 பேரும் சேர்ந்து திருவண்ணாமலை பல்லவன் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அப்போது பொதுமக்களிடம் இருந்து 3½ வருடம், 5¼ வருடம், 6 வருடம், 6¼ வருடம் என முதலீடு செய்வதற்கான திட்டங்களை விளம்பரப்படுத்தி 1,500 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 98 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை திருப்பிக்கொடுக்காமல் கடந்த 2018-ம் வருடம் ஏப்ரல் மாதம் நிதி நிறுவனத்தை மூடிவிட்டு 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சின்னக்கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த அன்பு என்பவர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரவீந்திரன் உள்பட 3 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் சென்னை பெரும்பாக்கத்தில் இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்று அவர்கள் 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

ரவீந்திரன் நடத்திய நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்க விரும்பினால் ஒரிஜினல் ஆவணங்களுடன் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்