டிராக்டர் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பலி

டிராக்டர் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2019-01-23 23:00 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஐ.வி.பட்டடை என்கிற இருதலைவாரிபட்டடை கிராமத்தை சேர்ந்தவர் சோமநாதன். இவரது மகன் திருமலை (வயது 16). இதே கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் விக்னேஷ் (21). பி.காம். முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று காலையில் வேலைக்கு செல்ல இருந்தார்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் முரளி (22). ஐ.டி.ஐ. முடித்து வேலை தேடி வந்தார். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு தியேட்டருக்கு படம் பார்க்க பள்ளிப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

பள்ளிப்பட்டு- சித்தூர் பிரதான சாலை வழியாக பள்ளிப்பட்டு நோக்கி சென்றனர். பள்ளிப்பட்டு ஒன்றியம் வெளியகரம் சாலை சந்திப்பு தமிழக- ஆந்திர எல்லையில் ஆந்திர மாநில போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து இருந்தனர்.

இந்த தடுப்புகள் இடையே அவர்கள் நுழைந்த அதே சமயம் எதிரே தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் விழுந்தது. சாலையில் தூக்கி வீசப்பட்ட திருமலை, விக்னேஷ், முரளி ஆகியோர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆந்திர மாநிலம் கார்வேட்டிநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்