சென்னை புறநகர் பகுதிகளில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் சாலை மறியல் 1,500 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் 1,500 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2019-01-23 23:00 GMT
ஆவடி, 

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளாக நேற்று அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடி கல்வி மாவட்டத்தில் அடங்கிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அரசு ஊழியர்கள், பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் ஷேக் கபூர் தலைமையில் ஆவடி தாசில்தார் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக ஆவடி புதிய ராணுவ சாலைக்கு வந்த அவர்கள், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு ஜாக்டோ- ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.

இதில் சிட்லப்பாக்கம் மற்றும் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மாதவரத்தில் மண்டல அலுவலகம் எதிரே ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திடீரென மாதவரம் மூலக்கடை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை மாதவரம் போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் காரணமாக எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகர் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 550 மாணவ- மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் நேற்று 16 மாணவர்களே பள்ளிக்கு வந்தனர்.

இதனால் மற்ற வகுப்பறைகள் பூட்டப்பட்டு, ஒரே வகுப்பறையில் 16 மாணவர்களும் அமர வைக்கப்பட்டனர். பொது தேர்வு நடைபெற 2 மாதங்களே உள்ள நிலையில் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை பூட்டிவிட்டு அலுவலர்கள் சென்று விட்டனர். இதனால் சான்றிதழ்கள் பெற வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் செய்திகள்