விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-24 22:45 GMT
சிவகங்கை,

இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஓய்வூதியம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புபவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இதே போல மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும். இந்த போட்டிகளில் முதல் மற்றும் 2, 3-வது இடங்கள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள் 2018 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருத்தல் வேண்டும். மாத வருமானம் ரூ.6ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தகுதியுடையவர்கள் இணையதளம் மூலம் வருகிற 21.2.2019 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்