புத்தக கண்காட்சி நடத்தக்கோரி இளைஞர் இயக்கத்தினர் மனு

பெரம்பலூர் இளைஞர் இயக்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Update: 2019-01-24 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் இளைஞர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில், ஓய்வுபெற்ற உதவி கல்வி அலுவலர் ஜெயராமன், டாக்டர் விஜய்ஆனந்த் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பெரம்பலூரில் 7 ஆண்டுகளாக அறிவு வேள்வியாக நடைபெற்றுவந்த புத்தக திருவிழா இந்த ஆண்டு நடத்துவதற்கு இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. புத்தக கண்காட்சியை தொடர்ந்து நடத்துவதன் வாயிலாக ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள், கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவுப்பயன்பெறுவார்கள். பெரம்பலூரில் வருகிற 29-ந் தேதி முதல் 10 நாட்கள் நகராட்சி அலுவலக திடலில் புத்தக கண்காட்சியை மாவட்ட நிர்வாகம் முன்னின்று அனைத்து தன்னார்வ அமைப்புகளுடன் ஒருங்கிணைத்து நடத்திடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக புத்தக கண்காட்சியை நடத்த வலியுறுத்தியும், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடத்த இளைஞர் இயக்கத்தினர் திட்டமிட்டிருந்தனர். இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், கோரிக்கை விளக்க மனுவாக கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்