படப்பிடிப்புக்காக சென்றபோது விபத்து: பஸ் சக்கரத்தில் சிக்கி சினிமா நடிகர் பலி குண்டும், குழியுமான சாலையால் 4 நாட்களில் 3 பேர் பலியான சோகம்

படப்பிடிப்புக்காக சென்றபோது, தனியார் கல்லூரி பஸ் சக்கரத்தில் சிக்கி சினிமா துணை நடிகர் பரிதாபமாக இறந்தார். குண்டும், குழியுமான சாலையால் கடந்த 4 நாட்களில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-01-25 22:30 GMT
பூந்தமல்லி,

சென்னை அயனாவரம், குருவப்பா தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் டேவி (வயது 47). சினிமாவில் துணை நடிகராக இருந்து வந்தார். இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்தவர் சையத்குபுதீன் (45). இவரும் சினிமா துணை நடிகர் ஆவார்.

நேற்று திருவேற்காட்டில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நண்பர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சையத்குபுதீன் ஓட்டினார். அவருக்கு பின்னால் சார்லஸ் டேவி அமர்ந்து இருந்தார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் அடுத்த பள்ளிக்குப்பம் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ், இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது சார்லஸ் டேவி மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சார்லஸ் டேவி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சையத்குபுதீன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சார்லஸ் டேவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய தனியார் கல்லூரி பஸ் டிரைவரான வியாசர்பாடியை சேர்ந்த பூபாலன் (62) என்பவரை கைது செய்தனர்.

மிக முக்கிய சாலையாக கருதப்படும் பூந்தமல்லி நெடுஞ் சாலையில் கோயம்பேடு தொடங்கி பூந்தமல்லி வரை குறிப்பாக வானகரம், பள்ளிக்குப்பம், வேலப்பன்சாவடி, சென்னீர்குப்பம், பாரிவாக்கம் ஆகிய பகுதிகளில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சகிதாரகீம், அஸ்வின் டேனியல்குமார் (19) என்ற கல்லூரி மாணவர் மற்றும் அவர்களை தொடர்ந்து 3-வதாக நேற்று சினிமா துணை நடிகர் சார்லஸ் டேவி உயிரிழந்து உள்ளார்.

இந்த சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்த பகுதி மக்கள் சார்பில் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று முன்தினம் பொதுமக்களே ஒன்று சேர்ந்து சாலையை சீரமைக்க முயன்றனர். இதையடுத்து 30 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னீர்குப்பம் முதல் வானகரம் வரை உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 2 கிலோ மீட்டர் சாலையை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகிறது.

சென்னையின் முக்கிய நுழைவு வாயிலாக கருதப்படும் பூந்தமல்லி நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. அதை தடுக்க சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்