விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 10 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

நாகை பகுதிகளில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 10 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.

Update: 2019-01-26 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில் கூடுதல் இருக்கைகள் வைத்து கொண்டும், போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், அதிக பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாருக்கு புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும், துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் அறிவுறுத்தலின் படியும், நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி தலைமையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் நாகையில் உள்ள பல்வேறு பகுதிகளில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நாகை-நாகூர் சாலையில் நடந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றியும், அதிக பயணிகள் ஏற்றி கொண்டும், கூடுதல் இருக்கைகள் வைத்து கொண்டு அதிவேகமாக வந்தது உள்பட விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 10 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக் கள் நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும் செய்திகள்