கரூரில் குடியரசு தினவிழா: தேசிய கொடியை கலெக்டர் ஏற்றி வைத்தார் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது

கரூரில் குடியரசு தின விழாவையொட்டி கலெக்டர் அன்பழகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Update: 2019-01-26 23:00 GMT
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலையிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று காலை, 70-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேசேகரன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தேசியக்கொடியினை கம்பத்தில் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.

தொடர்ந்து நாட்டுநலப்பணித்திட்டம், சாரணர்-சாரணியர் படை, தேசிய மாணவர் படை, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகளின் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து, அனைவரிடமும் தேசப்பற்றும், சமாதானமும் நிலவவேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டது. மேலும்் தேசிய கொடியின் நிறங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய கரூர் தியாகிககள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 58 பேருக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார். மேலும் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 34 காவலர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்களையும், 45 காவலர்களுக்கு மெச்சத்தக்க சேவைக்கான நன்னடத்தை சான்றிதழ்களையும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 137 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

இதையடுத்து முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் போரில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு பராமரிப்பு நிதியுதவியாக ரூ.18,000-ம், ஒரு நபருக்கு வங்கிக்கடன் வட்டி மானியமாக ரூ.28,552-ம், வருவாய்த்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா, இலவச வீட்டுமனைப்பட்டா, இயற்கைமரண நிதியுதவி என பல்வேறு திட்டங்களின் கீழ் 129 பயனாளிகளுக்கு ரூ.65 லட்சமும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு ரூ.48,150 மதிப்பிலான வேளாண்கருவிகள் உள்ளி்ட்ட நலத்திட்டங்கள் என பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் மொத்தம் 195 பயனாளிகளுக்கு ரூ.91 லட்சத்து 82 ஆயிரத்து 57 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

அதன் பின்னர் கரூர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம் மேலொங்கி பாலியல் குற்றங்களை தடுத்தல், மதுகுடிப்பதன் தீங்கு உள்ளிட்டவற்றை விளக்கும் விழிப்புணர்வு நடனம், பாரம்பரிய பறை ஆட்டம், “வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியா“ என்கிற தலைப்பில் தேசியஒருமைப்பாட்டை விளக்கும் நடனம் மற்றும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் வசிக்கும் தமிழக மக்களின் வாழ்வியல் முறைகள், விவசாயத்தோடு ஒன்றிய தை பொங்கல் விழா, சாகச நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் காண்போரை கவரும் விதமாக நடந்தது.

அதிலும் “பிளாஸ்டிக் நெகிழியை தவிர்த்து பூமிபந்தில் விதைபந்துகளை தூவுங்கள்“ என்பதை வலியுறுத்தி பாரத மாதாவுக்கு துணிப்பை, பாக்குமரத்தட்டு போன்றவற்றை அணிவித்து மாணவ, மாணவிகள் அரங்கேற்றிய நடன நிகழ்ச்சி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருந்தது. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பாரதி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கும்மராஜா, சிற்றரசு மற்றும் ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவாதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேஷ், முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி சாந்தி, உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்