மனிதர்களின் பாதுகாப்பிற்கு மரங்கள் மிக அவசியம் - நடிகர் விவேக் பேச்சு

மனிதர்களின் பாதுகாப்பிற்கு மரங்கள் மிக அவசியம் என்று பள்ளி விழாவில் நடிகர் விவேக் பேசினார்.

Update: 2019-01-27 23:57 GMT
சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கட்டுக்குடிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா குடியரசு தினத்யொட்டி நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன், நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் நடிகர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார்.

இதில் அமைச்சர் பேசும் போது, பள்ளிக்கு தேவையான மேடை அமைக்கவும், இங்குள்ள பள்ளங்களை நிரப்பவும் மண் போன்ற தேவையான பொருட்கள் வழங்க ஆவண செய்யப்படும். அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேசும்போது, இங்கு கூடியிருக்கும் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இணைந்து இந்த சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பள்ளியை அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த முயற்சித்தவர்களுக்கும், பள்ளிக்கு இடம் வழங்கியவர்களுக்கும் நன்றி கூறுகிறேன் என்றார்.

அதைத்தொடர்ந்து நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக் பேசியதாவது:- ஒரு சிறுவன் தன் வீடு அருகே இருந்த மரத்திற்கு நண்பன் ஆனான். அந்த மரம் சிறுவன் பள்ளிக்கு செல்ல ஆற்றை கடக்க வேண்டியிருப்பதால், கட்டுமரம் அமைக்க தனது மரக்கிளைகளை வெட்டிக் கொள்ள அனுமதித்தது. சிறுவனும் நன்கு படித்து, வாலிபனாகி திருமணம் செய்து கொண்ட பின்பு மனைவியுடன் குடியேற புதிய வீடு கட்ட மீண்டும் மரத்திடம் அனுமதி கேட்டு கிளைகளை வெட்டி வீடு கட்டி குடியேறினார்.

பின்பு மரத்தின் நண்பன் முதியோராகி இறந்த பின்பு, அவரை அந்த மரக்கிளைகளை வெட்டி எரித்தனர். மரங்கள் பல நூறு ஆண்டுகள் மனிதர்களை பாதுகாக்க பயன்படும். மேலும் மனிதர்களின் பாதுகாப்பிற்கு மரங்கள் மிக அவசியம். எனவே மாணவர்கள், இளைஞர்கள், ஒவ்வொருவரும் மரம் நட்டு வளர்த்து தேசத்தை காக்க சபதம் ஏற்போம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது போல் தெய்வத்திற்கு முன்பு குரு இருப்பதால் முதலில் குருவை (ஆசிரியர்களை) வணங்குவோம், கல்வியை கற்போம், மரம் வளர்ப்போம், தேசத்தை காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைச்சர் பாஸ்கரன், நடிகர் விவேக் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினர். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இந்த பள்ளியின் வெளிநாடுகளில் வசித்து வரும் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தது குறிப்பிடத்தக்கது.

விழாவில் மாநில இளைஞர் அணி செயலாளர் கருணாகரன், ஆவின் சேர்மன் அசோகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பிர்லா கணேசன், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் வாசு, செவ்வூர் ராமலிங்கம், நாகராஜன், ராஜசேகரன், திருவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம், பாரதி இளைஞர் நற்பணி மன்றம், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்