சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு

சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2019-01-29 22:15 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக அந்த அணை விளங்குகிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்ட நிலையிலும், அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட இருபோக விவசாயத்துக்காக ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 53.77 அடியாக குறைந்தது. இதனால் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு வைகை அணையில் இருந்து 6 நாட்களில், 184 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் ஆற்றின் வழியாக நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பிறகு 440 அடியாக தண்ணீரின் அளவு குறைக்கப்படும்.

5-வது நாளில் 250 கனஅடியாக குறைக்கப்பட்டு, 6-வது நாளில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும். அதன்படி வருகிற 4-ந்தேதி(திங்கள்கிழமை) காலையுடன் தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். ஏற்கனவே அணையில் தண்ணீர் குறைந்த நிலையில், மேலும் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 53.77 அடியாக இருந்தது. தற்போது மதுரை மாநகர குடிநீர் தேவைக்காகவும், சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காகவும் சேர்த்து வினாடிக்கு 560 கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்