ராமேசுவரத்தில் இந்து முன்னணியினர் உண்ணாவிரதம்

ராமேசுவரத்தில் இந்து முன்னணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-29 22:15 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து முன்னணி மாநில செயலாளராக இருந்த மா.முனியசாமி படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது நினைவாக ஸ்தூபி அமைத்து ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணியினர் மலர் அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது போலீசாரும், வருவாய்த்துறையின மற்றும் நகராட்சி அதிகாரிகளும் அங்கு கட்டிடம் கட்டியது தவறு. இங்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கமாட்டோம் என்று கூறி உள்ளே இருந்தவர்களை வெளியேற்றினர். மேலும் அந்த நினைவு மண்டபத்துக்கு வருவாய்த்துறையினர் பூட்டு போட்டனர்.

இந்த நிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேசுவர சுப்பிரமணியம், மாநில நிர்வாகி சண்முகம், மாநில பேச்சாளர் சபாபதி, மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, துணை தலைவர் சரவணன், நகர் தலைவர் நம்புராஜன், சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் பாரதிராஜா, மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் நேற்று அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றனர். அப்போது நினைவு மண்டபம் பூட்டப்பட்டிருந்ததால் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்களிடம், தாங்கள் நினைவு மண்டபத்துக்குள் சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், உயர் அதிகாரிகளிடம் பேசி மண்டபத்தை திறக்க செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் மண்டபம் திறக்கப்படாததால் அனைவரும் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேசுவர சுப்பிரமணியம் கூறியதாவது:–

மாநில செயலாளர் மா.முனியசாமி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் நாங்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு தனியாருக்கு சொந்தமான அந்த இடத்தில் நிலத்தின் உரிமையாளரின் அனுமதியுடன் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவரது நினைவு நாளில் எங்களது அமைப்பினர் அஞ்சலி செலுத்த வந்தபோது போலீசாரும், வருவாய்த்துறையினரும் தடுத்து நிறுத்தியதுடன் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசியதும், நினைவு மண்டபத்துக்கு பூட்டு போட்டதும் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி செயல்படுவதாக நாங்கள் உணர்கிறோம்.

மற்ற வழிபாட்டு தலங்களில் கூம்பு ஒலிபெருக்கி வைக்கப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணும் நேர்மையான அதிகாரி அவற்றை எல்லாம் அகற்ற வேண்டும் அல்லவா?. அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த வந்த எங்களை அனுமதிக்காதது வருத்தமளிக்கிறது. எனவே நாங்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக அதிகாரிகள் உடனடியாக இந்த கட்டிடத்தை திறந்து விடவேண்டும். அதுவரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு கோரிக்கைகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அப்போது இந்து முன்னணி நிர்வாகிகளிடம் போனில் பேசிய போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, முறையாக மனு அளிக்கும்படியும், அதுகுறித்து உரிய பரிசீலனை செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டு கலெக்டரை சந்திப்பதற்காக புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு உருவானது. தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்