தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-01-30 22:15 GMT
தேன்கனிக்கோட்டை, 

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவில் இருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்தன. இந்த யானைகள் தேன்கனிக்கோட்டை, சானமாவு, அஞ்செட்டி, போடூர்பள்ளம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளன. இவைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கோட்டையூர்கொல்லை கிராமத்தை சேர்ந்த பசவராஜ் (வயது 65) என்பவர் நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள காப்புக்காட்டிற்கு விறகு எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது காட்டு யானை ஒன்று அங்கு வந்துள்ளது. இந்த யானை பசவராஜை பார்த்த உடன் ஆக்ரோஷமாக அவரை நோக்கி ஓடி வந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பசவராஜ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும் யானை துதிக்கையால் அவரை தூக்கி வீசியது. இதில் பசவராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அது வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதற்கிடையே அப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த சிலர் பசவராஜ் யானை தாக்கி படுகாயம் அடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள், பசவராஜை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம் முதியவர் பசவராஜை நேரில் சென்று விசாரித்தார். யானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்