தேசிய அறிவியல் கருத்தரங்கம், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி வருகை

தேசிய அறிவியல் கருத்தரங்கம் ஊட்டியில் இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி வந்தார்.

Update: 2019-01-30 22:45 GMT
ஊட்டி,

இந்திய மண் வள பாதுகாப்பு சங்கம், ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் இயங்கி வரும் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில் மண் மற்றும் நீர்வள தொழில்நுட்பங்கள், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த 28-வது தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் இன்று(வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்குகிறது. கருத்தரங்கை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக கார் மூலம் நேற்று மாலை 5.45 மணிக்கு ஊட்டி ராஜ்பவனுக்கு வருகை புரிந்தார். அவரை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் கோத்தர், தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி கவர்னருக்கு வரவேற்பு அளித்தனர். இன்று(வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

அதன் பின்னர் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கவர்னர் தூய்மை பணியை மேற்கொள்கிறார். தொடர்ந்து அவர் ராஜ்பவனுக்கு செல்கிறார்.

இதற்கிடையே ஊட்டி மத்திய பஸ் நிலையம் எதிரில் கவர்னர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஊட்டி நகராட்சி கமிஷனர் நாராயணன் உடனிருந்தார். ஊட்டிக்கு தமிழக கவர்னர் வந்ததை அடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்