நிவாரண பெட்டகம் வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

நிவாரண பெட்டகம் வழங்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Update: 2019-01-31 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

கஜா புயலினால் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடு, ஓட்டுவீடு, மாடிவீடு, அரசின் தொகுப்பு வீடு என பாகுபாடு பார்க்காமல் அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வழங்கும் 27 நிவாரண பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.

போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க நகர தலைவர் வாசுதேவன், நகர செயலாளர் சுந்தர், இளைஞர் பெருமன்ற நகர தலைவர் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்