மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் பரிந்துரை

மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் பரிந்துரை செய்து துறைகளுக்கு கடிதம் அனுப்பினர்.

Update: 2019-01-31 22:45 GMT
தர்மபுரி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் ஒரு பகுதியாக தர்மபுரியில் நடந்த மறியல் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் போராட்டத்தை தூண்டியதாக 96 அரசு ஊழியர்கள் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான அரசு ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு போலீசார் கடிதம் அனுப்பினார்கள்.

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், தர்மபுரியில் வேலைநிறுத்த போராட்டத்தின்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்களில் குறிப்பிட்ட அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் மீது அனுமதியின்றி கூடுதல், சாலைமறியலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது, என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்