ரூ.27 கோடி வைர மோசடி முக்கிய குற்றவாளி கைது

ரூ.27 கோடி வைர மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update:2019-02-01 04:06 IST
மும்பை,

மும்பை பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்த 25 வைர வியாபாரிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் மதிப்பிலான வைரங்களை விற்று தருவதாக கூறி ஏஜெண்ட் யதீஷ் என்பவர் வாங்கி சென்றார். இதன்பின்னர் அவர் வைரகற்களுடன் தலைமறைவானதால் ஏமாற்றம் அடைந்தனர். இவர் சுமார் ரூ.27 கோடி மதிப்புள்ள வைரத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வைர வியாபாரிகள் பி.கே.சி. போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தலைமறைவான யதீசுடன் தொடர்புடைய கேத்தன் பார்மார், இம்ரான் கான் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

போலீசில் சிக்கினார்

ஆனால் முக்கிய குற்றவாளி யதீஷ் மட்டும் சிக்காமல் இருந்தார். அவரின் செல்போன் நம்பரை கொண்டு போலீசார் ஆய்வு நடத்தியதில் அஜ்மீர், டெல்லி, ஆக்ரா, லக்னோ, பீகார், ஐதராபாத் போன்ற இடங்களில் சுற்றி வந்தது தெரியவந்தது. மேலும் அவர் அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவில் சாது போன்று வேடமணிந்து தலைமறைவாக சுற்றி வந்ததும் தெரியவந்தது.

இந்தநிலையில், நேற்று விராரில் உள்ள குளோபல் சிட்டி பகுதிக்கு யதீஷ் வரவுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று யதீசை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.38 லட்சம் மதிப்புள்ள வைரக்கற்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்