மண்ணச்சநல்லூர் அருகே மணல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை

மண்ணச்சநல்லூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-02 22:15 GMT
சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மான்பிடி மங்கலத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு மண்ணச்சநல்லூர் மட்டுமல்லாது சமயபுரம், திருப்பைஞ்சீலி, ஈச்சம்பட்டி, பாச்சூர், கோவத்தகுடி, பூனாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் 700-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வியாபாரிகள் விற்பனைக்காகவும், பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காகவும் மணல் அள்ளிசெல்கின்றார்கள்.

இதனால் தினமும் நொச்சியத்திலிருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் காலையில் இருந்து மாலை வரை மாட்டு வண்டிகள் அணிவகுத்து செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. பல சமயங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலை நொச்சியம் பகுதியைசேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்குள்ள மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆற்றுக்குள் ஏராளமான மாட்டுவண்டிகள் திரண்டு நின்றன. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறும்போது, ‘இப்பகுதியில் செயல்பட்டுவரும் மணல் குவாரியில் இருந்து தினமும் 700-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிசெல்கின்றனர். இதனால் இங்கு உள்ள பெண்கள் ஆற்றுபகுதிக்கு குளிக்ககூட செல்லமுடியவில்லை. மேலும் இங்கு நிலத்தடி நீர்மட்டம் கீழே செல்லும் அபாய நிலையும் ஏற்படுகிறது. இதனால் இங்குள்ள மணல் குவாரியை அரசு உடனடியாக மூட வேண்டும்’ என்று கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார், பொதுப் பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்