திருவாரூர் அருகே அடகு கடையின் சுவரில் துளையிட்டு 8 கிலோ வெள்ளி- 4 பவுன் நகைகள் கொள்ளை

திருவாரூர் அருகே அடகு கடையின் சுவரில் துளையிட்டு 8 கிலோ வெள்ளி-4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து விட்டு கைவரிசையை காட்டியுள்ளனர்.

Update: 2019-02-03 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள மாங்குடியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவர் நகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருவாரூர் நகரில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தன்ராஜ் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை அடகு கடை அருகில் உள்ள சலூன் கடையை உரிமையாளர் திறக்க வந்து பார்த்தபோது அடகு கடையின் சுவரில் துளையிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுகுறித்து தன்ராஜூக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் அடகு கடைக்கு வந்தார். மேலும், தகவல் அறிந்த திருவாரூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர் போலீசாரும், தன்ராஜூம் அடகு கடைக்குள் சென்று பார்த்த போது உள்ளே இருந்த 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 4 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என தெரிகிறது.

திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் கடையின் பின்புற சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து வெள்ளி, தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். மர்ம நபர்கள் கொள்ளையடித்து பிறகு கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அப்போது மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கொள்ளை நடந்த இடத்தில் பதிவான ரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடகு கடையின் சுவரில் துளைபோட்டு வெள்ளி பொருட்கள், தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்