ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-02-05 22:45 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே செந்தாமரைக் கண் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாரதி கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீரசேகரன், மாவட்ட பொருளாளர் சரவணன், முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வம் பேசினார். கூட்டத்தில் புதிய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களாக மகேஷ்வரன், மணி, பாரதி, சாய்கார்த்தி, சுகன்ராஜ், விஜய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருக்காரவாசல் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 49 ஊராட்சிகளை கொண்ட கோட்டூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து பெருக வாழ்ந்தானை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில் சித்தமல்லி, புத்தகரம், நொச்சியூர், கும்மட்டி திடல், தேவதானம், செந்தாமரைக்கண் போன்ற பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டத்தினால் வரும் குடிநீர் வாரத்தில் சில நாட்கள் மட்டுமே வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் இலரா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்