140 நாட்களாகியும் கத்தரி காய்க்கவில்லை: தரமற்ற செடிகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

140 நாட்களாகியும் கத்தரி செடியில் கத்தரிக்காய் காய்க்காததால் தரமற்ற செடிகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் விவசாயி கூறினார்.

Update: 2019-02-06 22:45 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி சுதா(வயது 35). விவசாயியான இவருக்கு சொந்தமான விவசாய நிலம் தேவமங்கலம் கிராமத்தில் உள்ளது. அதில் ஒரு ஹெக்டேர் அளவில் கத்தரி பயிர் செய்திருந்தார். இதில் 140 நாட்கள் கடந்தும் பயிர் காய்க்காததால் விரக்தி அடைந்துள்ளார். இதுகுறித்து சுதா கூறியதாவது:-

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து கத்தரி செடிகள் வாங்கி வந்து பயிர் செய்து வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டோம். வேளாண்மைத்துறையின் அறிவுரை கேட்டு தகுந்த காலத்தில் பூச்சி மருந்து, ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் இட்டோம். ஆனால் இன்று (நேற்றுடன்) 140 நாட்கள் ஆகியும் செடி 5 முதல் 6 அடி உயரம் வரை வளர்ந்து விட்டது. ஆனால் இது நாள் வரை காய்ப்புக்கு வரவில்லை. மேலும் பூக்கள் வந்து கருகி விழுந்து விடுகின்றன. இது குறித்து வேளாண்மை துறை அலுவலகத்தில் நேரில் சென்றும் தொடர்பு கொண்டும் செடிகள் பற்றி விபரம் கூறினோம்.

ஆனால் அவர்கள் விவசாய நிலங்களில் நேரில் வந்து பார்க்காமல் மருந்து பெயர்களை மட்டும் கூறி வாங்கி தெளியுங்கள் என கூறினர். அவர்கள் கூறியபடி அனைத்து முறைகளையும் கையாண்டு எந்தவித பயனும் இல்லை. பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி ஊற்றியும், மருந்து தெளித்தும் ஊட்டச்சத்து கொடுத்தும் எந்தவித பலனும் இல்லாமல் தற்போது இந்த கத்தரி செடிகளுக்கு செலவு செய்வது வீண் என முடிவெடித்து செடிகளை அழித்து விடுவது என முடிவுசெய்தோம். பின்னர் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) டிராக்டரை கொண்டு எங்களது கத்தரி வயலை உழவு செய்து விட்டோம். இதுபோல் தரமற்ற செடிகளை விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சரண்யா, உதவி தோட்டக்கலை அலுவலர் பெரியசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயி சுதாவுக்கு தரமான கத்தரி விதைகளை கொடுத்தனர். மேலும் ஆதார் கார்டு, பட்டா- சிட்டா நகல் அனைத்தும் கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உயிர் உரம் ஊட்டச்சத்து உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சென்றனர். 

மேலும் செய்திகள்