தோவாளையில் இரட்டைக்கொலை: நெல்லை கோர்ட்டில் 4 பேர் சரண் காவலில் விசாரிக்க போலீசார் முடிவு

தோவாளை இரட்டைக்கொலை தொடர்பாக நெல்லை கோர்ட்டில் 4 பேர் சரண் அடைந்துள்ளனர். அவர்களை காவலில் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2019-02-06 23:15 GMT
ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (வயது 42), பூ வியாபாரி. இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் ஆர்த்தி என்ற மகள் உள்ளார். கடந்த 31-ந் தேதி கல்யாணி, மணிகண்டன் ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கல்யாணிக்கும், அவருடைய அண்ணன் சுடலையாண்டிக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த தகராறில் கூலிப்படையை ஏவி கல்யாணியையும், அவருடைய கணவர் மணிகண்டனையும் கொலை செய்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக சுடலையாண்டி மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே சுடலையாண்டிக்கும், திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இரட்டைக்கொலையை தொடர்ந்து அந்த பெண் தன்னுடைய குழந்தைகளுடன் தலைமறைவானார்.

அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் வேளாங்கண்ணியில் ஒரு விடுதியில் தங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த பெண்ணை போலீசார் பிடித்து நாகர்கோவில் கொண்டு வந்தனர். தற்போது அந்த பெண்ணிடம் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுடலையாண்டியின் கள்ளக்காதலி போலீசாரிடம் சிக்கியதை தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.

அதாவது குமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் சுனாமி காலனியை சேர்ந்த மோகன் மகன் சகாயசாஜூ ஜெனிஸ் (24), அனந்தபத்மநாபபுரம் மாதவலாயத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ராஜ்குமார் (32), பாண்டியராஜ் மகன் ராஜா (35), அய்யப்பன் (25) ஆகிய 4 பேரும் நேற்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

இந்தநிலையில் சுடலையாண்டி இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை. மேலும் இரட்டைக்கொலையில் தொடர்புடையவர்கள் எத்தனை பேர், அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் எவை? உள்ளிட்ட எந்த விவரங்களும் இதுவரை தெரியவில்லை.

எனவே கோர்ட்டில் சரண் அடைந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க ஆரல்வாய்மொழி போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போதுதான் கொலை பற்றிய முழுமையான விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்