உடன்குடியில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு மர்மநபர் கைவரிசை

உடன்குடியில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-07 22:00 GMT

உடன்குடி,

உடன்குடியில் டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

டிராவல்ஸ் உரிமையாளர்

உடன்குடி சுல்தான்புரத்தைச் சேர்ந்தவர் பதுருதீன் (வயது 60). இவர் சென்னை மண்ணடியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால் உடன்குடி சுல்தான்புரத்தில் உள்ள அவரது வீட்டில் யாரும் வசிக்கவில்லை. அந்த வீட்டின் முகப்பில் ஓட்டு வீடும், பின்பகுதியில் மாடி வீடும் உள்ளது.

இதனை நோட்டமிட்ட மர்மநபர் நேற்று முன்தினம் நள்ளிரவில் பதுருதீனின் ஓட்டு வீட்டின் மேற்கூரை வழியாக மாடி வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர், மாடி படிக்கட்டில் உள்ள கதவை உடைத்து திறந்து, அதன் வழியாக வீட்டுக்குள் இறங்கி சென்றார். பின்னர் அவர், வீட்டில் மின் விளக்கை எரிய செய்து விட்டு, அங்குள்ள 3 அறைகளில் இருந்த அலமாரிகளை உடைத்து திறந்தார். அதில் இருந்த சாவிகளை எடுத்து, அங்குள்ள 3 பீரோக்களை திறந்தார். அதில் ஒரு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்மநபர் திருடினார்.

மர்மநபருக்கு வலைவீச்சு

இதற்கிடையே பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், பதுருதீனின் வீட்டில் நள்ளிரவில் மின்விளக்கு எரிவதையும், மர்மநபர் நடமாடுவதையும் அறிந்து ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்டார். உடனே மர்மநபர் வெளியே ஓடி வந்து, பக்கத்து வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது ஓடிச் சென்று, அதன் பின்னால் உள்ள காட்டு பகுதி வழியாக தப்பி ஓடி விட்டார். அப்போது அவரது செருப்புகளை காம்பவுண்டு சுவர் அருகில் விட்டு சென்றார்.

இதுகுறித்து அந்த பெண், பதுருதீனுக்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக பதுருதீன், குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கும், தன்னுடைய உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருட்டு நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்