சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் தத்ரூபமாக நடித்துக்காட்டிய விபத்துக்காட்சி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த விபத்து நடைபெற்றது போன்ற காட்சியை மாணவர்கள் தத்ரூபமாக நடித்துக்காட்டினர்.

Update: 2019-02-07 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நேற்று நூதன முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சி நேற்று காலை நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் நடந்தது. அதன் விவரம் வருமாறு:–

ஒரு ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அந்த ஸ்கூட்டர் அவ்வழியாக வந்த ஒரு டெம்போ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த 3 பேரும் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில்  மயங்கி கிடந்தனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து ஓடி வந்த உறவினர்கள் (பெண்கள்) அவர்கள் 3 பேரையும் பார்த்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

இதையடுத்து அங்கு ஒரு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை நேரில் பார்த்தவர்களும், அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்களும் உண்மையாகவே விபத்து நடந்ததாகவே உணர்ந்தனர். சிறிது நேரத்துக்குப்பிறகுதான் இந்த சம்பவம் மக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நகர போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி என்பது தெரிய வந்தது. அந்த அளவுக்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ– மாணவிகள் தத்ரூபமாக நடித்துக்காட்டினர்.

இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் அருள்ஜாண் ஒய்ஸ்லின் ராஜ் தலைமை தாங்கினார். பின்னர் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில், மாணவ– மாணவிகள், பொதுமக்கள், போலீசார் அனைவரும் இணைந்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, “ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவோம், காரில் சீட்பெல்ட் அணிந்து செல்வோம், ஒருபோதும் மது அருந்தி வாகனம் ஓட்ட மாட்டோம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிச் செல்லமாட்டோம், அதிக பாரம் ஏற்றி செல்லமாட்டோம், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்போம்’’ என்பன போன்ற உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

மேலும் செய்திகள்