மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட்தேர்வில் தஞ்சை மாணவர், அகில இந்திய அளவில் 7-வது இடம் பிடித்தார்

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட்தேர்வில் தஞ்சை மாணவர் அகில இந்திய அளவில் 7-வது இடம் பிடித்துள்ளார்.

Update: 2019-02-07 23:00 GMT
தஞ்சாவூர்,

அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 6-ந்தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவுகள் கடந்த 31-ந்தேதி வெளியிடப்பட்டன. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு ஸ்கோர்கார்டு எனப்படும் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் அகில இந்திய அளவில் தஞ்சையை சேர்ந்தவரும், சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருபவருமான செரின்பாலாஜி (வயது 22) அகில இந்திய அளவில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். இவருடைய தந்தை பெயர் பன்னீர். தாயார் ராஜேஸ்வரி. இவர்கள் 2 பேரும் தஞ்சை அருகே உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர் கள் தஞ்சை ஈஸ்வரி நகரில் வசித்து வருகிறார்கள். செரின் பாலாஜிக்கு ஷெர்லின் என்ற சகோதரி உள்ளார்.

இது குறித்து செரின்பாலாஜி கூறுகையில், ”நான் 10-ம் வகுப்பு வரை தஞ்சை பொன்னையா ராமஜெயம் பள்ளியிலும், பிளஸ்-2 வரை திருச்சி எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளியிலும் மாநில பாடத்திட்டத்தில் படித்தேன். கடந்த 2013-ம் ஆண்டு பிளஸ்-2வில் 1,180 மதிப்பெண்கள் பெற்று திருச்சி மாவட்டத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றேன். தற்போது சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறேன். இந்த ஆண்டு மார்ச் 26-ந்தேதியோடு எம்.பி.பி.எஸ். படிப்பு நிறைவு பெற உள்ளதால் எம்.டி. படிக்க நீட் தேர்வை எழுதினேன்.

இதில் அகில இந்திய அளவில் 7-வது இடம் கிடைத்துள்ளது. எனக்கு முன் 6 இடங்களையும் வட இந்திய மாணவர்கள் பிடித்துள்ளனர். தமிழக அரசு இதற்கான தரவரிசை பட்டியலை மார்ச் மாதத்தில் தான் வெளியிடும். அப்போது தான் தமிழக அளவில் முதலிடம் என்பதை அறிவிப்பார்கள்”என்றார்.

மேலும் செய்திகள்