நாகர்கோவில் அருகே பயங்கரம்: முன்னாள் அதிகாரி குத்திக்கொலை ரவுடிகள் 2 பேரிடம் விசாரணை

நாகர்கோவில் அருகே முன்னாள் அதிகாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 2 ரவுடிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-07 23:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

நாகர்கோவில் அருகே பறக்கை கீழ செட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 66). கருவூலகதுறை முன்னாள் அதிகாரி. இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவியும், அய்யப்பன் மற்றும் மணிகண்டன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் மணிகண்டன் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். முருகேசன் தினமும் இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள குளத்தின் கரைக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலையும் முருகேசன் குளக்கரைக்கு சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் உடனே அவரை தேடி குளக்கரைக்கு சென்றனர். அப்போது குளத்தின் கரையில் தென்னை மரங்களுக்கு இடையே முருகேசன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரின் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில், முருகேசனை யாரோ மர்ம நபர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து முருகேசனை கொலை செய்த மர்ம நபர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளனரா? என்று போலீசார் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு குளக்கரையில் அனைத்து பகுதிகளிலும் நடந்தது. மேலும் முருகேசன் வீட்டில் இருந்து குளத்துக்கு வந்த வழியிலும் போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பறக்கை குளக்கரையில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முருகேசன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முருகேசன் கொலை செய்யப்படுவதற்கு முன் குளத்தின் கரை அருகே சிலர் மது அருந்திக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் அவர்கள் முருகேசனை குத்திக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனவே மது அருந்தியவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். முருகேசன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகே ஒரு கோவில் உள்ளது. அந்த கோவில் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் முருகேசன் வீட்டில் இருந்து வரும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

மேலும் 2 மர்ம நபர்கள் நடந்து வரும் காட்சியும் அதில் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 பேர் குறித்து விசாரணை நடத்தினோம். அப்போது அவர்கள் 2 பேருமே அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது சிக்கியுள்ள 2 பேருமே ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். அவர்கள் மீது கொலை, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

கொலை செய்யப்பட்ட முருகேசன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கருவூலகத்தில் அதிகாரியாக பணியாற்றியபோது அவர் லஞ்சம் வாங்கியதாகவும், இதனால் அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. முருகேசன் கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்