குமரிக்கு 19–ந் தேதி மோடி வருகை: அகஸ்தீசுவரத்தில் மேடை அமைக்கும் பணி தீவிரம் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்

குமரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள 19–ந் தேதி பிரதமர் மோடி வருகிறார். அதற்காக அகஸ்தீசுவரத்தில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

Update: 2019-02-09 23:00 GMT
தென்தாமரைகுளம்,

பிரதமர் நரேந்திர மோடி குமரி மாவட்டத்துக்கு வருகிற 19–ந் தேதி வருகை தருகிறார். அப்போது அவர், பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கியும் வைக்கிறார்.

மோடி கலந்து கொள்ளும் விழா குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. இதற்காக மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


மேடை அமைக்கும் பணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மோடி நாளை (அதாவது இன்று) திருப்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு தமிழகத்துக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முழுமை பெற்ற பிறகே அறிவிப்பு வெளியாகும். கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் சமமாக நடத்தப்படுவார்கள். வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து பா.ஜனதா தலைமைதான் முடிவெடுக்கும். எங்களது கூட்டணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும்.

தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதால் காங்கிரஸின் கை ஓங்கி உள்ளதா என்று கேட்கிறீர்கள், 1969 க்கு பிறகு 44 சதவீதமாக இருந்த காங்கிரஸ் ஓட்டு வங்கி தற்போது 4 சதவீதமாக குறைந்து விட்டது. எனவே எந்த சூழ்நிலையிலும் தமிழகத்தில் கை ஓங்கவே முடியாது. பட்ஜெட்டில் ஏராளமான நல்ல பல திட்டங்கள் உள்ளன.

இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

பேட்டியின்போது விவேகானந்தா கல்லூரி தலைவர் துரைசுவாமி, கல்லூரி முதல்வர் நீல மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்