460 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி திருமண நிதியுதவிடன் தாலிக்கு தங்கம் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

தர்மபுரி 460 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 77 லட்சத்து 75 ஆயிரம் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

Update: 2019-02-09 22:45 GMT

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நலஅலுவலர் நாகலட்சுமி வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 251 பட்டதாரிகள், 209 பட்டதாரி அல்லாதோர் என மொத்தம் 460 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 77 லட்சத்து 75 ஆயிரம் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 2011–ம் ஆண்டு முதல் 2018–ம் ஆண்டு வரை மொத்தம் 18,857 பயனாளிகளுக்கு ரூ.63 கோடியே 82 லட்சம் திருமண நிதியுதவி மற்றும் 75.8 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 220 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சத்து 96 ஆயிரத்து 530 மதிப்பிலான அம்மா ஸ்கூட்டர்களை வழங்கினார். மேலும் 32 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடியே 24 லட்சம் வங்கி கடனுதவியையும் அவர் வழங்கினார்.

இந்த விழாக்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் பாபு, மகளிர் திட்ட அலுவலர் ஆர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, நகர கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் குருநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்