பெரம்பலூரில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

பெரம்பலூரில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2019-02-09 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணாமலையார் தெருவை சேர்ந்தவர் வரதராஜ். இவருக்கு விக்டோரியா மகாராணி (வயது 40) என்கிற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றிய வரதராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். விக்டோரியா மகாராணி பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

கணவர் இறந்து விட்டதால் தனது மகன்களுடன் அண்ணாமலையார் தெருவில் உள்ள தனக்கு சொந்தமான 2 தளங்களை கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி விக்டோரியா மகாராணி வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு தனது மகன்களையும் அழைத்து கொண்டு சென்று விட்டார். பின்னர் சுற்றுலா முடிந்து நேற்று அதிகாலை தான் அவர்கள் திரும்பினர்.

அதிகாலை நேரம் என்பதால் விக்டோரியா மகாராணி மகன்களுடன் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கினார். இதையடுத்து நேற்று காலையில் அவர் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு விக்டோரியா மகாராணி அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறைகளின் கதவுகள் அனைத்தும் திறந்து கிடந்தது. மேலும் அறைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. ஒரு அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.23 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் விரல் ரேகைகள் தெரியாமல் இருப்பதற்காக, அதனை தண்ணீர் ஊற்றி அழித்து விட்டு தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அந்தப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு சம்பவம் நடந்த வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும் குளிர்சாதன பெட்டியும் திறந்திருந்தும், அதில் வைக்கப்பட்டிருந்த கேக் ஆகியவை காணாமல் போயிருந்தது. கியாஸ் அடுப்பை பற்ற வைத்தற்கான அறிகுறிகளும் காணப்பட்டது. எண்ணெய் கீழே தரையில் கொட்டியிருந்தது.

இதனால் மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிவிட்டு வீட்டில் சமைத்து சாப்பிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்