காட்பாடியில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை முயற்சி பணிச்சுமை காரணமா? போலீஸ் விசாரணை

காட்பாடியில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-10 22:15 GMT

காட்பாடி, 

காட்பாடியை அடுத்த லத்தேரி எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவர் வேலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திக்கும், வஞ்சூரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக், வஞ்சூரில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அவரை பலமுறை வீட்டுக்கு வரும்படி தாயார் அழைத்தும் கார்த்திக் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் அவருடைய மாமியார் வீட்டு கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ‘பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றேன்’ என தெரிவித்துள்ளார். எனினும் அது உண்மையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆயுதப்படை போலீசார் கூறுகையில், ‘கார்த்திக், காட்பாடியில் உள்ள அதிவிரைவு படைப்பிரிவில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரை பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் அரக்கோணத்தில் இன்று (நேற்று) மத்திய மந்திரி பங்கேற்கும் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அவர் பணிக்கு செல்ல விரும்பாமல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில மணி நேரத்திலேயே அவர் வீடு திரும்பினார். தற்போது நலமாக உள்ளார்’ என்றனர்.

மேலும் செய்திகள்