விழுப்புரம் அருகே பரிதாபம், கிணற்றில் மூழ்கி 3 மாணவிகள் சாவு

விழுப்புரம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-02-10 23:00 GMT
விழுப்புரம், 
விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சண்முகம் மகள் பவதாரணி (வயது 11), ஏழுமலை மகள் கவுசல்யா (12), மணி மகள் மணிமொழி (14). இவர்கள் 3 பேரின் வீடும் அருகருகே உள்ளது. இவர்களில் பவதாரணி அதே கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பும், அதே பள்ளியில் கவுசல்யா 7-ம் வகுப்பும், மணிமொழி 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தோழிகளான மாணவிகள் 3 பேரும் காலை 11 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றனர். இவர்களுடன் மணிமொழியின் தங்கையான 6-ம் வகுப்பு படித்து வரும் நித்யாவும் (11) உடன் சென்றாள்.

மாணவிகள் மணிமொழி, கவுசல்யா, பவதாரணி ஆகிய 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கி படிக்கட்டில் அமர்ந்தபடி தங்களது துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர். 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் இருந்தது. நித்யா மட்டும் கிணற்றுக்குள் இறங்காமல் மேலே நின்றுகொண்டிருந்தாள்.

அப்போது மாணவி பவதாரணி திடீரென கால்தவறி தண்ணீருக்குள் விழுந்தாள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிமொழி, கவுசல்யா ஆகிய இருவரும் பவதாரணியை காப்பாற்றுவதற்காக தண்ணீருக்குள் குதித்தனர். 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் சற்று நேரத்தில் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நித்யா, கிணற்றின் அருகில் நின்றபடி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினாள். இருப்பினும் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் நித்யா, அங்கிருந்து ஓடிவந்து தனது பெற்றோரிடம் கூறி அழுதாள்.

இந்த தகவல் அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்களிடையே பரவியது. உடனே பொதுமக்கள் அந்த கிணற்றுக்கு விரைந்து சென்றனர். பின்னர் இளைஞர்கள் சிலர், கிணற்றுக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கிய 3 மாணவிகளையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதனிடையே தகவல் அறிந்து வந்த கெடார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 மாணவிகளையும், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே 3 மாணவிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையறிந்ததும் 3 மாணவிகளின் உடல்களையும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கட்டியணைத்து கதறி அழுதனர். இது அங்கிருந்த காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற மாணவிகள் 3 பேர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. 

மேலும் செய்திகள்