நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை: “என்னுடன் குடும்பம் நடத்திய பெண்ணை தரக்குறைவாக விமர்சித்ததால் தீர்த்துக் கட்டினேன்” கைதானவர் வாக்குமூலம்

“என்னுடன் குடும்பம் நடத்திய பெண்ணை தரக்குறைவாக விமர்சித்ததால் தீர்த்துக் கட்டினேன்” என்று நாகர்கோவில் அருகே நடந்த இரட்டைக்கொலை வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-02-10 22:15 GMT
ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (வயது 55), பூ வியாபாரி. இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். கடந்த 31-ந் தேதி 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து முத்துவையும், கல்யாணியையும் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சொத்து தகராறு காரணமாக கல்யாணியின் அண்ணன் சுடலையாண்டி கூலிப்படையை ஏவி இரட்டை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலையாண்டியையும், கூலிப் படையினரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சுடலையாண்டி சென்னை தாம்பரம் கோர்ட்டிலும், கூலிப்படையை சேர்ந்த சகாயசாஜூ ஜெனிஸ் (24), ராஜ்குமார் (32), ராஜா (35), அய்யப்பன் (25) ஆகியோர் நெல்லை கோர்ட்டிலும் சரண் அடைந்தனர். சுடலையாண்டி கள்ளக்காதலி கோகிலவள்ளி, கோட்டாரை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சரணடைந்த 5 பேரையும் ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாட்கள் காவலில் எடுத்தனர். பின்னர், கல்யாணியின் அண்ணனான சுடலையாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சுடலையாண்டி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கு தோவாளை அருகே உள்ள பூர்வீக தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை 4 வழிச்சாலைக்காக அரசு எடுத்தது. அதன்மூலம் கிடைத்த இழப்பீடு தொகையில் ஏற்கனவே இறந்து போன எனது மற்றொரு சகோதரியான தானம்மாளின் மகன் இசக்கிராஜாவை தவிர அனைவருக்கும் பங்கு கொடுத்து விட்டேன். அதனால் இசக்கிராஜா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவை நில அபகரிப்பு பிரிவு போலீசார் விசாரித்து 2 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, நான் இசக்கிராஜாவுக்கு 6 லட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டேன். ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. இதையறிந்த கல்யாணி இசக்கிராஜாவுக்கு ஆதரவாக என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் கல்யாணி, என்னுடன் சேர்ந்து வாழும் கோகில வள்ளியையும் தரக்குறைவாக பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் கல்யாணியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் எனக்கு பழக்கம் ஆனார். ஒரு சொத்து பிரச்சினை தொடர்பாக நான் அவருக்கு உதவி செய்தேன். அதன்மூலம் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். அப்போது, தங்கை கல்யாணி பணம் கேட்டு தொல்லை செய்வதையும், தரக்குறைவாக பேசியதையும் ராஜ்குமாரிடம் கூறினேன். மேலும், கல்யாணியை தீர்த்து கட்டுவது குறித்தும் பேசி, வழக்குகளை நான் கவனித்து கொள்கிறேன் என்று கூறினேன். மேலும், நான் ராஜ்குமாருக்கு பல உதவிகள் செய்துள்ளதால், இந்த பிரச்சினையில் அவர் எனக்கு உதவுவதாக கூறி, கொலை செய்ய சம்மதம் தெரிவித்தார்.

அதைதொடர்ந்து ராஜ்குமார், சம்பவத்தன்று நண்பர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து கல்யாணி, அவரது கணவரையும் வெட்டி கொலை செய்து விட்டு தோவாளை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கு நான் அவர்களுக்காக காத்திருந்தேன். பின்னர், நாங்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் நெல்லையை நோக்கி புறப்பட்டோம். அப்போது, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை எனது தோட்டத்தின் அருகே 4 வழிச்சாலை பாலப்பகுதியில் உள்ள முட்புதரில் வீசி விட்டு தப்பி சென்றோம். நெல்லை சென்ற நாங்கள் அங்கு வாகன காப்பகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனித்தனியாக பிரிந்து தப்பி சென்றோம்.

இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறிய தகவலின் படி போலீசார் நெல்லை சென்று 3 மோட்டார் சைக்கிள்களையும், தோவாளை 4 வழிச்சாலை முட்புதரில் இருந்து 3 அரிவாள்கள், ஒரு கத்தி ஆகியவற்றையும் கைப்பற்றினர். மேலும், போலீசார் ராஜ்குமார் உள்பட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்