புஞ்சைபுளியம்பட்டி அருகே பரிதாபம் தண்ணீர் தொட்டியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

புஞ்சைபுளியம்பட்டி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-10 21:59 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. தறித்தொழிலாளி. இவருடைய மகன் ரோகித் (வயது 16). இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று ரோகித் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சொலவனூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் கபடி விளையாடிக்கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கால் கழுவிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு ரோகித் அங்கிருந்து சென்றார்.

வெகுநேரமாகியும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 15 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி ரோகித் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரோகித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி இறந்த ரோகித்தின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்