போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள்

போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2019-02-10 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமலும், தங்களது நிறுவனங்களை முறையாக பதிவு செய்யாமலும் பல போலி நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கொப்பரை தேங்காய், ஆடு, மாடு, நாட்டுக்கோழி, ஈமு கோழிப்பண்ணை உள்பட பல்வேறு பண்ணை திட்டங்கள், தங்க நகை முதலீட்டு திட்டம் மற்றும் சீட்டு நிறுவனங்களின் மூலம் அதிக வட்டி தருவதாகவும், குறைந்த காலத்தில் 2 மடங்காக பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி கவர்ச்சிகரமாக அறிவித்து மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். பொதுமக்கள் முதலீடு செய்யும் முதலீட்டு தொகை முழுவதையும் மேற்கண்ட மோசடி நபர்களிடம் இருந்து மீட்டு தரமுடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களது கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை முதலீடு செய்யும் முன் அந்த நிறுவனங்கள் பற்றி தீர விசாரிக்க வேண்டும். அந்த நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று நடத்தப்படும் நிறுவனமா? முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனமா? அவர்கள் சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களா? என்று அவர்களின் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு பின்னர் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவல் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்