மதுரை நகரில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ்காரர்களுக்கு கேடயம் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வழங்கினார்

மதுரை நகரில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களை பாராட்டி கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கேடயம் பரிசாக வழங்கினார்.

Update: 2019-02-10 22:55 GMT

மதுரை,

மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த ஆண்டு பதவி ஏற்றார். அன்றைய தினத்தில் இருந்து சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, குற்றம் இல்லாத நகராக உருவாக்க போலீசார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் போலீசாரிடம் உள்ள நிறை, குறைகளை அறிந்து அதனை உடனே நிறைவேற்றினார். இதனால் போலீஸ் அதிகாரிகள் முதல் கடைநிலை போலீசார் வரை சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

மேலும் நகரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவரை வார்டு பொறுப்பு அதிகாரியாக நியமித்தார். இதனால் அந்த வார்டில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் போலீசாருக்கு உடனுக்குடன் தெரிவதால் குற்றச்சம்பவங்களும் நகரில் குறைய தொடங்கி உள்ளன.

மதுரை நகரில் குற்றச்சம்பவங்கள் குறையவும், சிறப்பாகவும் பணியாற்றிய உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பாக புலனாய்வு செய்தவர்கள், அதிக வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்தவர்கள், திருட்டு வழக்குகளை கண்டுபிடித்து அதிக அளவு நகைகளை பறிமுதல் செய்தவர்கள், வழக்குகளை விரைவாக முடித்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்களுக்கான பாராட்டு விழா கமி‌ஷனர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் திலகர்திடல் உதவி கமி‌ஷனர் வெற்றிச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் காட்வீன்ஜெகதீஸ்குமார்(அண்ணாநகர்), பெத்துராஜ்(தல்லாகுளம்), ரமணி(ஜெய்ஹிந்தபுரம்), மலைச்சாமி(தெப்பக்குளம்), சந்திரசேகரன்(கூடல்புதூர்), மணிகண்டன்(கீரைத்துறை), அருணாசலம்(எஸ்.எஸ்.காலனி), கதிர்வேல்(மத்திய குற்றப்பிரிவு) அனிதா(திலகர்திடல்), சக்கரவர்த்தி(அண்ணாநகர்), செந்தில்குமரன்(போக்குவரத்து), சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், முருகன், ஆறுமுகம், மதுரைவீரன், ஜான், தியாகபிரியன், திலீபன் என 20–க்கும் மேற்பட்டவர்களுக்கு கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டி கேடயம் பரிசாக வழங்கினார். இனி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு கேடயம் வழங்கப்படும் என்றும் கமி‌ஷனர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்