ஒரு பெண் படித்தால் குடும்பமே பயன்பெறும் கவர்னர் கிரண்பெடி பேச்சு

ஒரு பெண் படித்தால் குடும்பமே பயன்பெறும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

Update: 2019-02-10 23:30 GMT

புதுச்சேரி,

கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அஜ்வீகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடர்பான நிகழ்ச்சி புதுவை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சுயஉதவி குழுக்களை சேர்ந்த சுமார் 350 பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கவர்னரின் சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அவர் பேசும்போது, மத்திய, மாநில அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார். மேலும் பெண்கள்தான் தேசத்தின் சக்தி என்று குறிப்பிட்டார்.

ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே பயன்பெறும் என்றும், சுயஉதவி குழுக்களின் அடிப்படையை வலுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை கிராமப்புறங்களில் கழிப்பிடம் அமைப்பதற்கான குறிக்கோளை எட்டிவிட்டது என்றும் குறிப்பிட்டார். சுய உதவி குழுவினை சேர்ந்தவர்கள் கிராமப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் காணமல் போன குளங்களை கண்டறிந்து தண்ணீரை சேமிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரவிப்பிரகாஷ், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அழகிரி, தொழில்துறை இயக்குனர் பிரியதர்ஷிணி, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்