அம்பை அருகே வாகைபதியில் தைத்திருவிழா தேரோட்டம்

அம்பை அருகே வாகைபதியில் தைத்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

Update: 2019-02-11 22:15 GMT
அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே வாகைகுளம் வாகைபதியில் உள்ள வைகுண்டர் ஆதிநாராயணர் கோவிலில் தைத்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, பால்தர்மம், இரவில் அன்னதர்மமும், முழுநேர நடை திறப்பு மற்றும் சிறப்பு பணிவிடைகளும் நடந்தது.

மேலும் தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், பல்லக்கு, நாகம், குதிரை போன்ற வாகனங்களில் அய்யா வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சியும், பால்குடம், சந்தனகுடம், கும்பிடு நமஸ்காரம் நிகழ்ச்சியும் நடந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வாகைபதி அன்புக்கொடி மக்கள் உள்பட திரளான பக்தர்கள், பக்தி கோஷத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். மேளக் கலைஞர்களின் செண்டை மேளத்துடன் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தின் முன்பு சிறுமிகள் மற்றும் பெண்கள் கோலாட்டம் ஆடினர். இரவில் அன்னதர்மம் வழங்கப்பட்டு, ரிஷப வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனி நடந்தது. விழா ஏற்பாடுகளை வாகைபதி அன்புக்கொடி மக்களும், அய்யாவழி பக்தர்களும் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்