சபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் - எடியூரப்பா சொல்கிறார்

சட்டசபை சபாநாயகருக்கு அவமானத்தை ஏற்படுத்தியது குமாரசாமி தான் என்று எடியூரப்பா கூறினார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதா மாநில தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-02-11 23:16 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் இன்று (அதாவது நேற்று) சபாநாயகருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். இரவு 12 மணிக்கு தனது ஆதரவாளரை அனுப்பி, பேச வைத்து ஆடியோவை முதல்-மந்திரி குமாரசாமி பதிவு செய்துள்ளார். பின்னர் பட்ஜெட் தினத்தன்று பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தி அதை குமாரசாமி வெளியிட்டார்.

அதில் சபாநாயகருக்கு ரூ.50 கோடி கொடுத்திருப்பதாக உரையாடல் இடம் பெற்றிருக்கிறது என்று குமாரசாமியே கூறினார். இதன் மூலம் சபாநாயகருக்கு குமாரசாமி அவமானம் இழைத்துவிட்டார். இந்த விவகாரத்தில் குமாரசாமி தான் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

அவரது தலைமையில் உள்ள மாநில அரசின் அதிகாரிகள் விசாரணை நடத்தினால், அது நேர்மையான முறையில் இருக்காது என்பது எங்களின் கருத்து. நாங்கள் விசாரணைக்கு தயார். நீதி விசாரணை அல்லது சபை கூட்டுக்குழு விசாரணை நடத்துமாறு கூறினோம்.

நாளையும் (இன்று) சட்ட சபையில் எங்களின் நிலைப்பாட்டை சபாநாயகருக்கு தெரிவிப்போம். அவசரகதியில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று வலியுறுத்துவோம். நாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் இலக்கு. அந்த இலக்கை அடைய நாங்கள் தீவிரமாக பணியாற்றுவோம்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்