பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நடந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நடந்தது.

Update: 2019-02-12 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் நடந்தது.

ஆய்வுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலின்போது, வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு எந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முழுமையாக சந்தேகத்துக்கு இடமின்றி பயிற்சி அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு தேவையான வாகன வசதிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும்.

வரைபடம்

வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது தொடர்பாகவும், அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் முன்னதாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தின் வாக்குச்சாவடி மண்டல வரைபடம், வட்ட அளவிலான வரைபடம் தயார் செய்ய வேண்டும்.

தேர்தல் வரவு-செலவு கணக்குகளை எவ்வாறு தயார் செய்வது என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அறிந்து அதன்படி செய்ய வேண்டும். தபால் ஓட்டுகள் அனுப்புவது தொடர்பாகவும், சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், தாசில்தார் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்