தஞ்சையில் மினி பஸ்சில் சென்ற பெண்ணிடம் ரூ.18 ஆயிரம் திருட்டு போலீசார் விசாரணை

தஞ்சையில் மினி பஸ்சில் சென்ற பெண்ணிடம் ரூ.18 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-12 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த துலுக்கம்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் தனபால். இவருடைய மனைவி ராஜகுமாரி(வயது 35). இவர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்த குழுவில் 12 பேர் உள்ளனர். இவர்கள் சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் குழுக்கடன் பெற்றுள்ளனர். இதற்காக மாதந்தோறும் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்பட்டு மொத்த தொகையை தனியார் நிறுவனத்திடம் கட்டுவது வழக்கம்.

அதன்படி இந்த மாதத்திற்கான தொகை 12 பேரிடமும் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.17 ஆயிரத்து 770 வசூலானது. இந்த தொகையை ராஜகுமாரியிடம் குழு தலைவி கொடுத்து, தனியார் நிறுவனத்தினரிடம் செலுத்தும்படி கூறினார். அதன்படி நேற்று காலை ராஜகுமாரி தனது கைக்குழந்தையுடன் பஸ்சில் தஞ்சைக்கு வந்தார். பின்னர் அவர், தஞ்சை ரோகிணி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இருந்து மினிபஸ்சில் ஏறி காவேரி சிறப்பு அங்காடி பஸ் நிறுத்தத்திற்கு சென்றார்.

அங்கு மினிபஸ்சில் இருந்து கீழே இறங்கியுடன் தனது கையில் இருந்த துணிப்பையை ராஜகுமாரி பார்த்தபோது, அதில் இருந்த மணிபர்சை காணவில்லை. அந்த மணிபர்சில் தான் ரூ.17 ஆயிரத்து 770 இருந்தது. மினிபஸ்சில் பயணம் செய்தபோது மர்ம நபர் யாரோ பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மீண்டும் தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தார். அவர்கள் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி கைக்குழந்தையுடன் கண்ணீர் மல்க தெற்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்