தூத்துக்குடியில் கடல்வாழ் உயிரினங்கள் விழிப்புணர்வு கண்காட்சி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்

தூத்துக்குடியில் கடல்வாழ் உயிரினங்கள் விழிப்புணர்வு கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

Update: 2019-02-12 21:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கடல்வாழ் உயிரினங்கள் விழிப்புணர்வு கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

கண்காட்சி

தூத்துக்குடி மண்டல மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நேற்று தொடங்கியது. அறக்கட்டளை அலுவலர் ரகுவரன் தலைமை தாங்கினார்.

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை வனஉயிரின காப்பாளர் மற்றும் இயக்குனர் அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் திருமால், ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

மாணவர்கள் பார்வையிட்டனர்

கண்காட்சியில் அரியவகை கடல் ஆமை, கடல் அட்டை, பவளப்பாறைகள், வண்ண மீன்கள், சிப்பிககள், கடல்பாசி, சங்கு, பதப்படுத்தப்பட்ட பல்வேறு வகையான அரிய மீன்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். கண்காட்சி நாளை (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.

இதுகுறித்து வனஉயிரின காப்பாளர் அசோக்குமார் கூறியதாவது:-

4,200 உயிரினங்கள்

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக பகுதி ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை பரவி உள்ளது. இதில் உள்ள கடல்சார் தேசிய பூங்கா 21 தீவுகளை கொண்டது. 560 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. இங்கு 4 ஆயிரத்து 200-க்கும் அதிகமாக கடல்சார் உயிரினங்கள் உள்ளன. இங்கு கடல் அட்டை, கடல் குதிரை, கடல் ஆமை, திமிங்கலம் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த உயிரினங்கள் அட்டவணை பிரிவில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடத்தப்படுகிறது. பழையகாயல், புன்னக்காயல் பகுதிகளில் அலையாத்தி காடுகள் உள்ளன. இந்த காடுகள் புயல், சுனாமியில் இருந்து மக்களை பாதுகாக்கிறது. இதனால் அந்த காடுகளை பாதுகாக்க வேண்டும். வனத்துறை மூலமும், வேட்டை தடுப்பு பணியாளர்கள் மூலமும் பாதுகாக்கப்படுகிறது. புதிதாக அலையாத்தி காடுகளை வளர்க்கும் பணிகளையும் வனத்துறை மேற்கொண்டு உள்ளது. இதனை யாரேனும் அழித்தால், அரசு சட்ட விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்