புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் பெருவிழா திருப்பலி திரளானவர்கள் பங்கேற்பு

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் பெருவிழா திருப்பலி நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-02-12 21:45 GMT
ஓட்டப்பிடாரம், 

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் பெருவிழா திருப்பலி நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

புனித அந்தோணியார் ஆலயம்

‘தென்னகத்துப்பதுவை’ என மக்களால் அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலியும், நற்கருணை ஆசிரும் நடந்தன.

பெருவிழா திருப்பலி

விழாவின் சிகர நிகழ்ச்சியான பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை முதல் திருப்பலி நடந்தது. 11-30 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணி பாப்புசாமி தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. இதில் குருக்கள் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் மக்கள் நேர்ச்சைக்காக மொட்டை போடுதல், நோயில் இருந்து சுகம் பெற வெள்ளிப்பொருட்களை காணிக்கையாக செலுத்துதல் மற்றும் கும்பிடுசேவை செய்தனர். 13 முறை ஆலயத்தை சுற்றி வந்து ஜெபித்தல், புதுமைக்கிணற்றில் குளித்தல் மற்றும் புனித அந்தோணியாரிடம் குழந்தைகளை விற்று வாங்குதல் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சமய வேறுபாடுகளை கடந்து திரளாக வந்து பிரார்த்தனை செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மரிய பிரான்சிஸ், உதவி பங்குதந்தைகள் எட்வின் ஆரோக்கிய நாதன், சதிஷ் செல்வதயாளன் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்