டெல்லி சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து: பயிற்சிக்கு சென்ற இடத்தில் பலியான கோவை வாலிபர்

டெல்லிக்கு பயிற்சிக்கு சென்ற கோவை வாலிபர் அங்கு சொகுசு ஓட்டலில் தங்கி இருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியானார்.

Update: 2019-02-13 00:00 GMT

திருப்பூர்,

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் நேற்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 17 பேர் இறந்துள்ளனர். இதில் திருப்பூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் அடங்குவார்கள். இது குறித்த தகவல்கள் வருமாறு:–

திருப்பூர் பிச்சம்பாளையத்தில் தனியார் பனியன் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி ரோடு செந்தில் நகரை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் நந்தகுமார் (வயது 31), திருப்பூர் மாவட்டம் அவினாசி ராக்கியாபாளையம் வெற்றிவேல் நகரை சேர்ந்த சுகுமாரன் என்பவரின் மகன் அரவிந்த் (40) ஆகியோர் மெர்சண்டைசராக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் 2 பேரும் டெல்லியில் நடந்த பனியன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கூட்டம் மற்றும் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த 10–ந் தேதி திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவு கரோல் பாக் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அரவிந்த், நந்தகுமார் ஆகிய 2 பேரும் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து இருவரின் உறவினர்களுக்கும் டெல்லி போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு 2 பேரின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.

இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் டெல்லியில் இருந்து இன்று (புதன்கிழமை) திருப்பூர் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். தீபத்தில் பலியான கோவை வாலிபர் நந்தகுமாருக்கு சாரதா பேபி (23) என்ற மனைவியும், ரித்தேஷ் என்கிற மகனும் உள்ளனர். பலியான அரவிந்த்துக்கு தேவிகா என்ற மனைவியும், பூஜித் (11) என்ற மகனும், கனிஷ்கா (8) என்ற மகளும் உள்ளனர். அவர் இறந்த சம்பவத்தால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கி உள்ளது.

மேலும் செய்திகள்