சேடபட்டி அருகே பரபரப்பு: ரோந்து சென்ற சப்–இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து

சேடபட்டி அருகே ரோந்து சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-02-12 23:00 GMT

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் சேடபட்டி போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாயன் (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவில், உடன் பணியாற்றும் போலீஸ்காரர் ஆனந்துடன் சின்னக்கட்டளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

சின்னக்கட்டளை பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்தனர். உடனே சப்–இன்ஸ்பெக்டர் மாயன், அவர்களை அழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள் எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து நழுவிச் செல்ல முயன்றனர்.

உடனே அவர்களில் ஒருவரை, சப்–இன்ஸ்பெக்டர் மாயன் மடக்கிப் பிடித்தார். திடீரென்று அந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியால் சப்–இன்ஸ்பெக்டர் மாயனின் கழுத்தில் குத்திவிட்டு ஓடிவிட்டார்.

இதில் காயம் அடைந்த மாயன் வலியால் துடித்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் மாயனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நபரையும், அவருடன் நின்றிருந்த நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ரோந்து சென்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்