கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி தனியார் சர்க்கரை ஆலையை விவசாயிகள் முற்றுகை

பெண்ணாடம் அருகே, கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி தனியார் சர்க்கரை ஆலையை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-13 22:30 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு கடந்த 2016-17, 2017-18-ம் ஆண்டு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு தொகையை வழங்கவில்லை. இந்த நிலுவை தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இருப்பினும் ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று கரும்பு நிலுவை தொகை ரூ.86 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகள் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஆலை நிர்வாகம் வாங்கியுள்ள ரூ.26 கோடி கடனை உடனடியாக அடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலையை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து அவர்கள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்