காரில் உரசி சென்றதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: டிரைவரை தாக்கிய போலீசை கண்டித்து சாலை மறியல்

காரில் உரசி சென்றதை தட்டிக்கேட்டதால் டிரைவரை தாக்கிய போலீஸ்காரரை கண்டித்து, 50–க்கும் மேற்பட்ட கால்டாக்சி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-13 23:00 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 23). கால் டாக்சி டிரைவர். நேற்று முன்தினம் நள்ளிரவு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு அவர்களின் வீடுகளில் விட்டுவிட்டு காரில் பள்ளிக்கரணை நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், அவரது காரில் உரசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், மோட்டார்சைக்கிளில் சென்ற நபரை காரில் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தார்.

அதில், காரில் உரசி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவர், பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் மகாவீர் என்பது தெரிந்தது. அவரிடம், எதற்காக காரில் உரசி விட்டு சென்றீர்கள்? என ரஞ்சித்குமார் தட்டிக்கேட்டார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் மகாவீர், டிரைவர் ரஞ்சித்குமாரை தாக்கியதுடன், அவருக்கு ஆதரவாக வந்த மற்றொரு கால் டாக்சி டிரைவர் டேவிட் சாமுவேல் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த கால் டாக்சி டிரைவர்கள் 50–க்கும் மேற்பட்டோர், டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸ்காரரை கண்டித்து வேளச்சேரி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட கால் டாக்சி டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு டிரைவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காரில் உரசி சென்ற போது போலீஸ்காரர் மகாவீர் மது அருந்தி இருந்தாரா? என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்