கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2019-02-13 23:00 GMT
கிணத்துக்கடவு, 

கோவை மாவட்டத்தில் தக்காளி உற்பத்தியில் கிணத்துக்கடவு முதல் இடத்தை வகிக்கிறது. இங்கு விளையும் தக்காளி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கிணத்துக்கடவு பகுதியில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் இருந்தது.

இதனால் கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சொக்கனூர், சிங்கையன்புதூர், சூலக்கல், சங்கராயபுரம், வடபுதூர், கல்லாபுரம், கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம், கொண்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தக்காளி நடவு செய்திருந்தனர். அவை காய்ப்புக்கு வந்துள்ளன.

கிணத்துக்கடவு பகுதியில் தற்போது கடுமையான வெயில் வாட்டி எடுப்பதால் தக்காளி செடிகளில் அதிகளவில் தக்காளி பழுக்க தொடங்கி உள்ளது. இதனால் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கு ஏலம்போனது. ஆனால் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 20 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதன்காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.4-க்கு ஏலம் போனது.

ஒரே நாளில் கிலோவுக்கு 4 ரூபாய் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்