தூத்துக்குடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-13 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள ராமச்சந்திராபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் உமையொருபாகம் (வயது 53). இவர் கடந்த 1984-ம் ஆண்டு போலீஸ் துறையில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் நீரிழிவு நோய் காரணமாக அவருடைய கால் விரலை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். மேலும் அவர், பணிச்சுமை காரணமாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர், கடந்த 8-ந் தேதி முதல் 30 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான ராமச்சந்திராபுரத்துக்கு வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் மாடியில் படுத்து இருந்தவர் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் அவருடைய மகள் ஸ்ரீதேவி மாடி அறைக்கு சென்று பார்த்தார். அப்போது உமையொருபாகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து பதறிப்போன அவர் கதறிஅழுதார்.

இதுகுறித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது நீரிழிவு நோய் காரணமாக விஷம் குடித்து இறந்தாரா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்